சென்னை:அதிமுகவின் சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான இன்பதுரை (மார்ச் 21) இன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் திமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நாஞ்சில் சம்பத் அதிமுக தலைவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்து அவதுாறு செய்யும் நோக்கில் உள்நோக்கத்தோடு அநாகரீகமாக ஏக வசனத்தில் பேசியது சட்டப்படி தவறு.
உயர்நீதிமன்றத்தில் மனு
கடந்த 2017ஆம் ஆண்டு பல்லாவரம் காவல் நிலையத்தில் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது நாஞ்சில் சம்பத் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை புகார் அதில் அரசியல் தலைவர்களை அநாகரீகமாக பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் இது போன்று அவதூறாக எவரையும் பேசமாட்டேன் என உறுதி அளித்து நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார், தற்பொழுது வழக்கு நிலுவையில் உள்ளது.
அநாகரீகமான பேச்சு
இது போன்ற அநாகரீகமான முறையில் இனி பேசுவதில்லை என்று நீதி மன்றத்தில் தெரிவித்த நாஞ்சில்சம்பத், தற்போது உறுதிமொழிக்கு எதிராக நடந்து வருகிறார். மேலும், 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென மூளையிலுள்ள நரம்பு மண்டல பாதிப்பு காரணமாக நாகர்கோவிலில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு நாஞ்சில் சம்பத் பின்னர், சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் தற்போது அவர் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் பார்க்கும் போது, அவருக்கு நரம்பு மண்டல பிரச்சினையினால் மன நலமும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனவே தான், நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் ஏற்கனவே அளித்த உறுதிமொழிகளை மறந்து அநாகரீகமான முறையில் மேடையில் பேசி வருகின்றார்.
நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளும் எந்த பொதுக் கூட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது. மேலும், அவர் மீது Indian Lunatic Act Sec (மனநல பாதிப்பு) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் உரிய பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம் கூட நிறைவேற்றத் தயார்' - கே.எஸ்.அழகிரி பேச்சு