கன்னியாகுமரி:தக்கலையைச் சேர்ந்த லாரன்ஸ் 1991ஆம் ஆண்டு பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1993 முதல் 1996 வரை வனத்துறை அமைச்சராக இருந்தார். அதிமுக மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 2006இல் திமுகவில் இணைந்த லாரன்ஸ் மாநில சிறுபான்மையினர் அணி துணை செயலாளராக இருந்தார்.
பின்னர் உடல் நலக்குறைவால் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். முன்னாள் அமைச்சர் லாரன்ஸின் மகன் ஆண்டோ ஸ்டாலின். இவர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், "கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை அயனாவரத்தில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கினேன். நிதி நிறுவன தொழிலில் முன் அனுபவம் இல்லாததால் நிதி நிறுவனங்களில் இடைத்தரகராக பணிபுரிந்த ரமேஷ் என்பவரை எனது நிறுவனத்தில் மேலாளராக பணி அமர்த்தினேன்.:
6 வருடங்களாக நிதி நிறுவனத்தில் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த 2018ஆம் ஆண்டு நிதி நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்த போது 30 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டிருந்தது எனக்கு தெரியவந்தது. மேலும், எனது நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ், அவரது கூட்டாளியான சுதாகர், சாய் சரவணன், ரமேஷின் இரண்டாவது மனைவியான பிரேமசுதா ஆகியோருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தீவிர விசாரணையில் வெளிவந்த உண்மை :குறிப்பாக, ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து 116 போலியான நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். அந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி தங்கள் நிறுவனத்திலிருந்து 30 கோடி ரூபாய் வரை பைனான்ஸ் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், மோசடி பணத்தை உடனடியாக ரமேஷின் இரண்டாம் மனைவியான பிரேமசுதாவின் வங்கி கணக்கிற்கு மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.