தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பவாரியா கொள்ளைக் கும்பல் தலைவனின் சகோதரர் பிணைக் கேட்டு மனு!

சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பவாரியா கொள்ளைக் கும்பல் தலைவனின் சகோதரர் 16 ஆண்டுகள் கழித்து பிணைக் கேட்டு மனுத்தாக்கல் செய்திருப்பதைக் கண்டு நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.

பவாரியா கொள்ளைக் கும்பல் தலைவனின் சகோதரர் பிணைக் கேட்டு மனு!
பவாரியா கொள்ளைக் கும்பல் தலைவனின் சகோதரர் பிணைக் கேட்டு மனு!

By

Published : Jan 5, 2021, 6:10 PM IST

கடந்த 2005ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம், வட நாட்டைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்களால் நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டிலிருந்து ஏராளமான நகை, பணத்தையும் கொள்ளைக் கும்பல் திருடிச் சென்றது.

இந்தியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை குறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு தொடர்பாக எழுப்பப்பட்ட விமர்சனங்களைத் தொடர்ந்து அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கொலையாளிகளை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார்.

டி.ஐ.ஜி ஜாங்கிட் தலைமையிலான குழு தீவிர விசாரணையைத் தொடங்கியது. விசாரணையில், இந்தியா எங்கும் இதே போன்று நடந்த குற்றங்களில், குற்றவாளிகளின் கைவிரல் கோடுகளும் கொலை செய்யும் முறையும் ஒத்துப் போனது தெரியவந்தது. ஒரே குழு தான் இக்குற்றங்களைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகித்தார்கள்.

அதன் பின்னர் உத்தரப் பிரதேச காவல் துறை, மத்திய புலனாய்வுத் துறையினருடன் இணைந்து விசாரணையை மேற்கொண்டனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களின் தொடர்பை உறுதிசெய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கொள்ளைக் கும்பலின் தலைவர் ஓம் பிரகாஷ் பவாரியா, அவரது சகோதரர் ஜெகதீஸ்வரா உள்ளிட்ட 32 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையின் உதவியோடு கன்னோசியில் உள்ள ஒரு வீட்டில் விடியற்காலையில் கொள்ளைக் கும்பலின் தலைவர் ஓம் பிரகாஷ் பவாரியா, அவரது சகோதரர் ஜெகதீஸ்வரா உள்ளிட்ட 9 பேரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர்களை கைது செய்து தமிழ்நாடு அழைத்துவந்தனர். பவாரியா கும்பல் உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய நான்கு லாரிகளையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர்களில் ஓம் பிரகாஷ் பவாரியா சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது சகோதரர் ஜெகதீஷ்பரா, கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து இன்னும் விசாரணை கைதியாக புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்தநிலையில், ஜெகதீஷ்பரா தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவானது, நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான அமர்வின் முன்பாக இன்று (ஜன.5) விசாரணைக்கு வந்தது.

பவாரியா கொள்ளைக் கும்பல் தலைவனின் சகோதரர் பிணைக் கேட்டு மனு!

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதி, கடந்த 16 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அத்துடன், 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 9 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை? ஏன் இவ்வளவு தாமதம்? என கேள்வியெழுப்பினார். இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உரிய விவரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற தமிழ்த் திரைப் படத்தின் கதை கரு, இந்த கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :சென்னையில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details