அதிமுக ஆட்சிக் காலமான கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை செய்தனர். அப்போது வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
மேலும் செந்தில் பாலாஜியை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை நடத்தினர். இதனையடுத்து செந்தில் பாலாஜி மோசடி வழக்கிலிருந்து விடுவிக்ககோரி எம்.பி, எம்.எல்.ஏ வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆவணங்களை வைத்து கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் வீட்டில், அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் சோதனை நடத்தினர்.
மேலும் சென்னை மேற்கு அண்ணா நகர் ஜெ.ஜெ நகரில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் கணேசன் என்பவருடைய வீட்டில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான எட்டு காவலர்கள் சுமார் ஆறு மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர்.