சென்னை:அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி சசிகலா அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை பயன்படுத்தி கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், விருகம்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் புகார் மனுவை அளித்தனர். அதில், “சசிகலா தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவின் கொடியையும், அதிமுகவின் பொதுச் செயலாளர் பெயரையும் தவறான எண்ணத்தோடு பயன்படுத்தி வருகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் சசிகலா
இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக என்ற கட்சி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்று வருகிறது. தொண்டர்களிடையே ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சசிகலா தவறான எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கக்கூடிய ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர்களிடம் தான் கட்சிக்கு உரிமை உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்” என்றார்.