சென்னை: காவல்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது மனித உரிமைகளை மீறி செயல்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணையில் இன்று(ஜூலை.19) அவர் ஆஜரானார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் கைது செய்யப்பட்டபோது உடைமாற்றக்கூட அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும்,. மருந்து, மாத்திரைகள் எடுக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறினார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசியல் கைதிகளுக்கான முதல் வகுப்பு வசதிகள் இல்லாத பூந்தமல்லி சிறையில் கொசுக்கடிக்கு இடையில் அடைக்கப்பட்டதாகவும், பல ஆண்டுகளாக அரசியலில் உள்ள எனக்கே பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் நடைபெற்றதாகவும், எனவே இதுதொடர்பாக 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
" எதிர்கட்சி துணைத் தலைவராக யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். சபாநாயகர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும். ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் கடிதம் தரலாம். ஆனால் அதிகாரமும் அங்கீகாரம் யாரிடம் உள்ளதோ அவர்கள் சொல்லுவதை தான் சபாநாயகர் கேட்க வேண்டும்.