இந்திய உளவுத்துறை பணியகத்தின் முன்னாள் இயக்குநரும், லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவருமான தினேஷ்வர் சர்மா (66) உடல்நலம் பாதிக்கப்பட்டு நவ. 25ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரலில் கடுமையான பாதிப்பை கண்டிருந்த அவருக்கு வென்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதற்காக அவருக்கு மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 4) மதியம் இரண்டரை மணி அளவில் தினேஷ்வர் சர்மா உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கிழக்கு ஜெர்மனி, போலந்து, இஸ்ரேல், தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உளவுத்துறை குறித்த பயிற்சியை பெற்ற தினேஷ்வர் சர்மா, நாகாலாந்து, ஜம்மு-காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 நான்கு மாநிலங்களில் பணியாற்றியுள்ளார். பி.எஸ்.எஃப், சி.ஆர்.பி.எஃப் மற்றும் ஐ.பி. போன்ற நாட்டின் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்.எஸ்.ஏ.) அஜித் டோவலுடன் ஒன்றாக பயிற்சிப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி, ஆங்கிலம், மலையாளம், தமிழ், அரபு, உருது, மைதிலி ஆகிய 7 மொழிகள் அறிந்தவராவார்.