சென்னை : சென்னையைச் சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். கடந்த 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில், துணை ஆட்சியர், மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். கடந்த, 2019ஆம் ஆண்டு தன் ஐஏஎஸ் பதவியை சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்தார்; தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்தும் வந்தார்.
இந்த நிலையில், சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் வரலாறு காணாத வகையில் தாக்குதலுக்குள்ளாகி வருவதாக நான் உணருகிறேன். வரக்கூடிய நாட்களில் இந்த தாக்குதல் அதிகரித்து இந்தியாவின் பன்முகத் தன்மை கடும் சோதனைகளை சந்திக்கும் என்று கருதுகிறேன்'
கடந்த 2019 ஆம் ஆண்டு, செப்.6 ஆம் தேதி எனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்யும் போது எழுதிய கடிதத்தில் இப்படி தான் எழுதினேன். இந்தியா சந்தித்து வரும் இத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்ள வழிவகையை கண்டடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே பதவியை ராஜினாமா செய்தேன்.
நான் ராஜினாமா செய்த இந்த ஒரு வருட காலத்தில், பல அற்புதமான மனிதர்களை சந்தித்தேன். இளைஞர்கள், மாணவர்கள், மக்களையும் நாட்டையும் நேசிக்கும் பலர் என்னோடு இணைந்து, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில், உணர்வோடு கலந்து கொண்டனர். இந்த போராட்டங்களின் போது தான், நான் இருக்க வேண்டிய இடம் இது தான் என்பதை உணர்ந்தேன். இவர்கள் தோளோடு தோள் நின்று, நான் நம்பும் மதிப்பீடுகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று உணர்ந்தேன்.
நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள ஒரே வழி அனைவரையும் ஒன்றிணைப்பதே என்பதை உணர்ந்தேன். அரசியலமைப்புச் சட்டத்தை நேசிப்போர் அடுத்த தலைமுறைக்கு ஒரு நேசம் மிகுந்த இந்தியாவை விட்டுச் செல்வதற்கு ஒன்றாக கரம் கோர்க்க வேண்டியது காலத்தின் தேவை.