சென்னை:அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு சென்னை அலுவலர்களுக்கு பன்னாட்டு ஆடை நிறுவனங்களான (under armour)அண்டர் ஆர்மர் (levi's)லிவைஸ், (super dry) சூப்பர் ட்ரை ஆகியோர் தங்கள் நிறுவனங்களின் பெயரில் போலி ஆடைகளைத் தயாரித்து சென்னையின் பல்வேறு இடங்களில் விற்கப்படுவதாக புகார் அளித்திருந்தனர்.
இதனையடுத்து குறிப்பிட்ட கடைகளை கண்காணித்த அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் நேற்று முன்தினம் (பிப்.4) திடீரென மூன்று கடைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
சோதனையில் மூன்று கிளைகளிலும் போலி ஆடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் ரூ.1.59 லட்சம் மதிப்பிலான ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஹரூன், செரிஃப், இஸ்மாயில் பாஷா, மற்றும் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இந்த போலி ஆடைகள் எங்கு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடைகளைத் தவிர ஆன்லைன் மூலமாகவும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் மின்னணு பொருள்கள், ஆடைகள், காலணிகள், கைப்பைகள் எனப் பல பொருள்கள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அறிவுசார் சொத்துரிமை பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உரிய புகார் அளிக்கும் பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.