சென்னை: தென்மாவட்டங்களுக்கு 380 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றை சமாளிக்க தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் மே 24 (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வரவுள்ளது. இச்சூழலில், சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்தும், பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுகையில், "சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து 4500 பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை (மே 23) இரவு 11.45 மணி வரை இயக்கப்படும். போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரையில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறித்து தற்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மேலும், கூடுதலாக 400 பேருந்துகள் தயாராக உள்ளன. இதற்கு மேலும் கூடுதலாக பயணிகள் வருகை தந்தால், அவர்கள் பயணிக்க ஏதுவாக மாநகரப் பேருந்துகளைப் பயன்படுத்தி விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி வரை இயக்க திட்டமிட்டுள்ளோம். கோயம்பேட்டில் மட்டும் இன்று முதல் 1500க்கும் அதிகமான பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களுக்கு மட்டும் 380 அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் பேருந்தில் பயணிப்பது குறித்த கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தொடர்ந்து பயணிக்கலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பர். கூட்டத்தினைப் பொறுத்து பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்” என்றார்.