சென்னை: மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ் மொத்த விற்பனை கடையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் சதிஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை செய்தனர்.
தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு அதிரடி சோதனை செய்தனர். அப்போது கடையின் உள்ளே சோதனை செய்ததில் அதிர்ச்சியான விஷயத்தை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கண்டு பிடித்தனர். அங்கே பூமிக்கடியில் சம்ப்பு கட்டி அதில் உணவு சமைக்கும் எண்ணெய் சேமித்து விற்பனை செய்தது கண்டு அதிர்ந்து போயினர்.
அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அந்த கடையில் இருந்து பரிசோதனைக்காக எண்ணெய்யை எடுத்து உள்ளனர். மேலும் தற்காலிகமாக கடையை பூட்டி நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதிஷ்குமார், “அந்த கடையில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சோதனைக்கு சென்றோம். அப்போது ஒரே சம்பில் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் பாமாயிலை கலந்து வைத்து விற்பனை செய்து உள்ளனர். அது முற்றிலும் தவறானது எனக் கூறிய அவர் அங்கிருந்து சூரிய காந்தி எண்ணெய் 1,000 லிட்டர், 3,400 பாம் ஆயில் என மொத்தம் 4,400 கெட்டுப்போன எண்ணெயை பறிமுதல் செய்து உள்ளோம்.