சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள், தலைவர்களின் பரப்புரைகள் தீவிரமடைந்துவருகின்றன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 137ஆவது வார்டில் போட்டியிடும் திமுகவினர் இருசக்கர வாகனத்தில், உறையில் ஒரு ஓட்டுக்கு ரூ. 500 வீதம் பூத் சிலிப்புகளை வைத்து வீட்டுக்கு வீடு பணம் விநியோகம் செய்வதாக 10ஆவது மண்டலத் தேர்தல் பறக்கும் படை அலுவலர் நடராஜனுக்குத் தகவல் கிடைத்தது. 137ஆவது வார்டு நெசப்பாக்கம் ஜெயலலிதா நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
97 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும் படையினர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றைச் சோதனை செய்தபோது வாகனத்தின் சீட்டை உடைத்து சீட்டுக்கு அடியில் பார்த்தபோது, திமுக சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி 66 உறைகள் இருந்ததாகவும், அது உள்ளே ஒரு ஒட்டுக்கு 500 ரூபாய் என வீட்டு முகவரியுடன் இருந்ததைக் கைப்பற்றி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதில் ரூ. 97,500, பூத் சிலிப் 52 தாள், ஓட்டுநர் உரிமம் நகல் இருந்தது. அனைத்தையும் கைப்பற்றிய அலுவலர்கள் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுக, அமமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல் துறை விசாரணை நடத்திவருகின்றது.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் மதுரையை கலக்கும் ’மாஸ்டர்’ விஜய்