சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 3 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் ஊட்டி மலர் கண்காட்சி, கொடைக்கானலில் மலர் கண்காட்சி, ஏலகிரியில் மலர் கண்காட்சி ஆகிய இடங்களில் மட்டுமே மலர் கண்காட்சி வைத்த நிலையில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
மலர்க் கண்காட்சியில் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களை உருவாக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இதைத்தவிர செல்ஃபி எடுக்கும் பகுதி மலர் வளைவுகள் மணல்தொட்டி அடுக்குகளால் ஆன வடிவமைப்புகள் அமைக்க சுமார் 4 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மலர்களால் ஆன பஸ், இருக்கைகள் தேர் மற்றும் நறுமணப் பொருட்களில் கிராம்பு ஏலக்காயால் செய்யப்பட்ட மாடு மற்றும் விவசாயிகளின் உருவம், இலக்கியம் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் பெருந்திரளான மக்கள் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் சா. தமிழ்வேந்தன், “இந்த தலைமுறைக்கு நடத்தப்படும் முதல் மலர் கண்காட்சி, இந்த மலர் கண்காட்சிக்கு பொதுமக்கள் அதிக வரவேற்பை அளித்துள்ளனர். இந்த மலர் கண்காட்சியில் 27 வகையான மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் கடையேழு வள்ளல்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்த வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.
சாமந்தி பூவில் ஐஸ்கிரீம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய வடிவிலான மயில், முற்றிலும் பழங்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள், இவை எல்லாம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவரையும் ஈர்த்து வருகிறது. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, அதியமானுக்கு ஔவையார் நெல்லிக்கனி கொடுத்த வடிவம், யாழ் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.