தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவால் வாடும் பூ வியாபாரிகள்! - flower merchants in chennai woes by full lock down due to corona

சென்னை: ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், மலர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாடாத மலர்களையே எப்போதும் விற்பனை செய்பவர்களின் வாடியக் கதை, நம்மை கலங்கச்செய்தது. அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

merchants
merchants

By

Published : May 6, 2020, 4:23 PM IST

கரோனா வைரஸ் பரவலால் நாடே முடங்கிக் கிடக்கும் இவ்வேளையில், பூ விற்பனையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதே பல இடங்களில் பிரச்னையாக உள்ளதால், பலரும் பூக்களைத் தேவையற்ற செலவாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பூக்களை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த விவசாயிகள், பூ வியாபாரிகளின் வாழ்க்கை மீள முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு மலர்ச் சந்தையை தற்காலிகமாக மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றுமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில், மாதவரத்தில் வெறும் 30 கடைகள் மட்டுமே உள்ளதாக மலர் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரோனாவால் வாடும் பூ வியாபாரிகள்!

இவ்விவகாரம் குறித்து ஈடிவி பாரத் செய்தியாளர்களிடம் பேசிய கோயம்பேடு மலர் அங்காடி வியாபாரிகள் சங்கத் தலைவர் மூக்கையா, ' கோயம்பேடு மலர் சந்தையில் 470 கடைகள் உள்ளன. ஆனால், மாதவரத்தில் 30 கடைகளுக்குத்தான் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். மேலும் அதிகாலை 3 முதல் 7 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டுமாம். மல்லிகைப்பூ சந்தைக்கு வருவதே 12 மணிக்குத்தான். பெரும்பாலான வியாபாரிகள் பூக்களை இருசக்கர வாகனத்தில்தான் வாங்கிச் செல்வார்கள். ஆனால், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதுபோன்ற நிபந்தனைகளுடன் எப்படி வியாபாரம் செய்வது. இதனால் ஊரடங்கு முடியும் வரை சந்தையை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். தற்போது உணவுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கூலித் தொழிலாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். வேலையில்லாமல் சொந்த ஊருக்குச் சென்றால், கோயம்பேடு வியாபாரி என்றால், ஊர் மக்களே வெறுக்கிறார்கள் ' என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறுகிறார்.

சென்னையில் மே 3ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிகளில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 40 நாட்களுக்குப் பிறகு, வழக்கமான இடங்களில் மலர் விற்பனையைத் தொடங்கியுள்ளனர், வியாபாரிகள். ஆனால், வெகு சிலரே பூக்களை வாங்குகின்றனர்.

கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே 35 ஆண்டுகளாக மலர் வியாபாரம் செய்து வரும் ரேணுகா பேசும்போது, '40 நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் வியாபாரத்தை தொடங்கியுள்ளோம். வழக்கமாக 600-700 ரூபாய்க்கு விற்பனையாகும். தற்போது 300 ரூபாய்க்குக் கூட வியாபாரமில்லை. வாடிக்கையாக பூ வாங்குபவர்கள் மட்டும் வங்கிச் செல்கிறார்கள். ஊடரங்கு காலத்தில் செலவுக்குப் பணமில்லை, அரசு கொடுத்த அரிசி உள்ளிட்டவையும் மோசமானதாக இருக்கிறது. வீட்டு வாடகையும் கேட்கிறார்கள், என்ன செய்வது என்றே புரியவில்லை' என்றார் விரக்தியுடன்.

பெரும்பாலும், இதுபோன்ற சிறு வியாபாரங்களில் ஈடுபடுவோருக்கு அசாத்திய துணிச்சல் இருக்கும். ஏனெனில் இப்படி எத்தனையோ நெருக்கடிகளை அவர்கள் தங்கள் வாழ்வில் பார்த்திருப்பார்கள். அதிலிருந்து மீண்டும் இருப்பார்கள். ஆனால், கரோனாவால் வந்த இந்நெருக்கடி அப்படியானதாக அவர்களுக்கு இல்லை.

கரோனாவால் வாடும் பூ வியாபாரிகள்!

இதையும் படிங்க: கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு?

ABOUT THE AUTHOR

...view details