சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னைவிமான நிலையத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் விமான நிறுவனங்களுக்கு தனித் தனிகட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, விமான சேவைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சென்னை விமான நிலைய அலுவலர்கள் கூறியுள்ளனர்.
சென்னையிலிருந்து திருச்சி, தூத்துக்குடி செல்லும் விமானங்கள் ரத்து! - நிவர் புயல்
சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் விமானம் மற்றும் திருச்சியில் இருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்படுகிறது எனவும், இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்படுகிறது என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க, மழை நீரை வடிக்கும் இயந்திரங்கள் மற்றும் 2 மோட்டார் பொருத்திய கனரக வாகனங்கள் சென்னை விமான நிலையத்திற்குள் இருப்பதாகவும் விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன், சி.எஸ்.எஃப் அலுவலர்கள் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், புயல் வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள காரணத்தினால், காற்றின் வேகத்தைப் பொருத்து சென்னையில் விமானங்கள் தரையிறங்கும் எனவும் சென்னை விமான நிலைய அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குமரியில் மீண்டும் தொடங்கியது படகு சேவை - சுற்றலாப் பயணிகள் மகிழ்ச்சி