சென்னை: பள்ளிக்கரணை கண்ணபிரான் கோயில் அருகே அம்பேத்கர் குறுக்குத் தெருவில் உள்ள காலி இடத்தில் சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக்கொள்வதாக கடந்த 27ஆம் தேதி இரவு பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்று பார்த்தபோது, அங்குள்ள புதரில் மேடவாக்கம், தாகூர் தெருவை சேர்ந்த ரவுடி பிரைட் ஆல்வின்(22), வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவருடன் பெருமாள்(23), என்பவர் வெட்டுகாயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் பெருமாளை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் இறந்து கிடந்த ரவுடி ஆல்வின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்க்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பள்ளிக்கரணை அழகிரி தெருவை சேர்ந்த கிங்ஸ்லி பவுல்(22), பிரவீன்(20), பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த அற்புத தேவசீலன்(27), இம்மானுவேல் தெருவை சேர்ந்த சிவா(20), மற்றும் பெருங்குடியை சேர்ந்த சிவக்குமார்(21), ஆகிய ஐந்து பேர், இக்கொலை சம்பவம் தொடர்பாக, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
விசாரணையில் பிரைட் ஆல்வினும், அஜய் என்பவரும் பள்ளிகரணையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களின் தகராறில் பஞ்சாயத்து செய்ததில் இருவருக்கும் முன் விரோதம் ஏறப்பட்டு அதன் காரணமாக அஜய், ஆல்வினை கொலை செய்ய திட்டம் தீட்டி பிரவின் என்பவன் மூலம் வரவழைத்து வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். முக்கிய நபரான அஜய் மட்டும் தலைமறைவாக உள்ளார் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:லோன் ஆப் மோசடி - டெல்லியில் 5 பேர் கைது