திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘பள்ளியில் பசுமை’ என்கிற மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மரக்கன்றுகளை நட்டுவைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
‘மறு வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வெற்றி பெறும்’ - ஜெயக்குமார் நம்பிக்கை
சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மரக்கன்றைகளை நட்டுவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ராதாபுரம் தொகுதியைப் பொறுத்தவரை எந்த தவறும் நடைபெறவில்லை. கடந்த முறை அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல் மறு வாக்கு எண்ணிக்கையிலும் இன்பதுரை வெற்றி பெறுவார். தமிழ்நாட்டிற்கு வருபவர்களை வரவேற்பது தமிழர்களின் பண்பாடாகும். மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில் பேனர் வைக்கப்படும்” என்றார்.
சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு அதிமுக பாஜகவிடம் உரிய முறையில் மதிப்பளித்து ஆதரவு கேட்கவில்லை என்ற பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்திற்குப் பதிலளித்த அவர், “கூட்டணி தொடர்பாகத் துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படியே கூட்டணி தொடர்ந்து வருகிறது. கமல் போன்றவர்கள் தங்களின் வளர்ச்சிக்காக அதிமுகவைக் குறை சொல்கிறார்கள். அதிமுகவிற்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.