’வாகனங்கள் அல்லது ஆன்லைன் மூலமாக மீன் விற்க அனுமதிக்க வேண்டும்’ - Chennai news
சென்னை: வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊரடங்கு காலத்தில் மீன் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![’வாகனங்கள் அல்லது ஆன்லைன் மூலமாக மீன் விற்க அனுமதிக்க வேண்டும்’ மீன் விற்பனைக்கு அனுமதி வேண்டும்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-fishermen-0206newsroom-1622647958-912.jpg)
தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றினால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களுக்கு காய்கறிகள், மளிகைப் பொருள்கள், பழங்கள் ஆகியவை பல்வேறு வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தாங்களும் மீன் வியாபாரத்தை வாகனங்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவோ செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தென்னிந்திய மீனவர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாரதி நம்மிடம் கூறுகையில், "மீனவர்கள் உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிக்கின்றனர் என்பதை அரசுகள் உணர வேண்டும். பெரிய ஹோட்டல்களுக்கு பார்சல் சேவையை அரசு அனுமதித்துள்ளது. அந்த ஹோட்டல்களுக்கு வெளி மாநிலங்களிலிருத்து கொண்டு வரப்படுகிற மீன்கள் விற்கப்படுகின்றன" என்று கூறிய அவர் ஊரடங்கு காலங்களில் மீன்கள் வாரத்திற்கு மூன்று நாள்களாவது கரோனா நெறிமுறையைப் பின்பற்றி வாகனங்கள் மூலம் விற்கலாம் என்று உறுதி செய்ய வேண்டும்.
இது சம்பந்தமாக மீனவ சங்கங்களின் தலைவர்கள் காணொலி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தி அரசுக்கு ஒரு மனுவை அளிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்மிடம் தொலைபேசி வாயிலாகக் கூறுகையில் "கடந்த ஆண்டு முழு ஊரடங்கின்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, மீனவர்கள் விசைப்படகுகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மீன் பிடிக்கலாம் என்று அரசு கேட்டு கொண்டது. உதாரணமாக, ஒரு மீனவ கிராமத்தில் 300 விசைப்படகுகள் இருந்தால், 150 மீனவர்கள் ஒரு நாளைக்கு மீன்பிடிக்கச் செல்லலாம். அடுத்த நாளில் மீதமுள்ள 150 நபர்கள் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று முடிவெடுத்து மீன் விற்பனை கூட்டமின்றி செய்யப்பட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டது" என்று சுட்டிக் காட்டினார்.