தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவி ஷீல்ட் தடுப்பூசி: 75 தன்னார்வலர்களுடன் முதல்கட்ட சோதனை நிறைவு! - கரோனா தடுப்பூசி சோதனை

சென்னை: தமிழ்நாட்டில் கோவி ஷீல்ட் தடுப்பூசி சோதனை 75 தன்னார்வலர்களுக்கு முதல்கட்டமாக நிறைவு பெற்றது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

Vaccine
Vaccine

By

Published : Nov 8, 2020, 5:42 PM IST

தமிழ்நாட்டில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் 300 நபர்களிடம் கோவி ஷீல்டு தடுப்பூசி செலுத்தி சோதனை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 26ஆம் தேதி அனுமதி வழங்கியது.

அதைத் தொடர்ந்து, பொது சுகாதாரத் துறையின் சார்பில் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தற்பொழுது முதல்கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் முடிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வரவில்லை. இதனால் 300 பேருக்கு செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், 75 தன்னார்வலர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், "ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட கோவி ஷீல்டு தடுப்பு மருந்து ஆகஸ்ட் மாதத்தில் 200 டோஸ் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை செலுத்த ஒப்புதல் அளிக்கும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளின்படி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டனர். 18 வயதுக்கு மேற்பட்ட கரோனா நோய் தாக்காத நபர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல் கட்டமாக தலா 150 பேருக்கு தடுப்பு மருந்து அளிக்க திட்டமிடப்பட்டன. அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்த 75 தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டன.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு கண்காணிக்கப்படுவர். தடுப்பூசி மருந்தால் பாதிப்பு ஏற்படுகிறதா என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், தடுப்பு மருந்தினால் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா? என ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து ஆய்வு அறிக்கை மத்திய அரசிற்கு அனுப்பப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details