சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் காட்டுத்தீயால் 8,660 ஹெக்டேர் காடுகள் அழிந்தன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சேதத்தை கட்டுப்படுத்த மாநில வனத்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், ஆண்டுதோறும் சராசரியாக 1,200 ஹெக்டேர் காடுகள் தீயில் அழிந்து வருவதாக தெரிகிறது.
தரவுப்படி 2017 ஆம் ஆண்டு 1,770 ஹெக்டேர் காடுகளும், 2018 ஆம் ஆண்டு 1,390 ஹெக்டேர் வனப்பகுதிகளும் தீயினால் அழிந்தன. 2019 ஆம் ஆண்டு 3,100 ஹெக்டேர் காடுகள், 2020 ஆம் ஆண்டு 1,400 ஹெக்டேர் காடுகள் தீயிக்கு இரையாகின. கடந்த ஆண்டு 1,000 ஹெக்டேர் அளவில் காடுகள் தீயால் அழிந்துள்ளன. இது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மனித செயல்கள் மூலமாகவே 95 விழுக்காடு வனத்தீ ஏற்படுகிறது என்கின்றனர் வன ஆர்வலர்கள்.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியவுடனேயே, வனங்களில் காட்டுத்தீ என்ற பேச்சு அடிக்கடி எழுகிறது. வனப்பகுதியில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள காடுகளில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று முறை காட்டுத்தீ பரவியுள்ளன. இதனால் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் சிறிய உயிரினங்கள் அழிந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
மனித செயல்பாடுகளால் நிகழும் காட்டுத்தீயை தடுக்க வனம் குறித்த கல்வியையும் விழிப்புணர்வையும் காடுகளின் அருகே வாழும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் கொடைக்கானல், கோத்தகிரி, சத்தியமங்கலம் மற்றும் அமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் தீயானது பரவியுள்ளது.
காடுகளின் ஓரங்களில் கவனக்குறைவாக சிலர் பீடி மற்றும் சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் வீசி விடுவதாலும் தீயானது ஏற்படுகிறது என்கின்றனர் வன ஆர்வலர்கள்.
வனவிலங்கு நிபுணர் ஜோசப் ஹூவர் நம்மிடம் கூறுகையில், "காட்டு தீயானது மனிதர்களின் செயல்பாட்டால் 99 விழுக்காடு பரவுகிறது. மிகை வெப்பம் மற்றும் வேகக் காற்றால் மூங்கில் குச்சிகள் உரசல்களால்தான் பெருமளவில் காட்டுத்தீ ஏற்படுகிறது என்று சொன்னாலும், இதனால் ஒரு விழுக்காடுதான் தீ ஏற்படுகிறது என சொல்லலாம். வனக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பின், இந்த குற்றவாளிகள் அதிகாரிகளை பழிவாங்குவதற்காக காடுகளில் தீயை மூட்டுவதுண்டு" எனத் தெரிவித்தார். மேலும் காட்டுத்தீயால் காடுகளில் வாழும் ஊர்வன வகையை சேர்ந்த உயிரினங்கள் மற்ற சிறிய விலங்கினங்கள் அழிந்து விடும் என்று கூறிய அவர், தீ ஏற்படும் போது காடுகளின் பல்லுயிர் தன்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய கேடு ஏற்படும் என அவர் விளக்கினார்.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில், "காடுகளின் அருகே உள்ள கால்நடை மேய்ப்பாளர்கள் மற்றும் வனப்பொருள்கள் சேகரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மேய்ச்சலை அதிகப்படுத்துவதற்காக நன்றாக தெரிந்தே சிறுதீயை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு ஏற்படுத்தும்போது இந்த தீயானது அடர்ந்த காடுகளில் பரவுகிறது. இது மட்டுமல்லாமல், வனத்தில் உள்ள பல்லுயிர்களை அழிக்க வழிவகை செய்கிறது" எனக் கூறினார்.
மேலும் அவர், வனத்துறை அதிகாரிகள் தீயை அணைப்பதன் தேவைகளை புரிந்து கொண்டு, ஆண்டு தோறும் நவம்பர் மாதம் தீ பரவும் பாதை தடுப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், வனத்துறையினர் நிதி பற்றாக்குறையால் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் அல்லது ஏப்ரல் மாதம்தான் இந்த பணிகளை தொடங்குகின்றனர். இதனால் தீயை முழுமையாக அணைக்க இயலாமல் போய்விடுகிறது. எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு போதுமான நிதி ஒதுக்கி, வன ஊழியர்களையும் நியமனம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தின் காடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை நினைவு கூர்ந்த விஜய் கிருஷ்ணராஜ், இது போன்ற தீ விபத்துக்களை தடுக்க வனத்துறையினருக்கு அதிக அளவிலான தீயணைப்பு வாகனங்களை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
காட்டுத்தீ மூலம் 8,660 ஹெக்டேர் காடுகள் அழிப்பு இது குறித்து தலைமை வனப் பாதுகாவலர் சையத் முசாமில் அப்பாஸ் கூறுகையில், "காட்டுத்தீ பரவுதலை கண்காணிக்க மற்றும் கையாள மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் பிற வன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த வனப்பகுதியில் தீ பிடித்தாலும் அதனை உடனே அணைக்கும் வகையில் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார். கடந்த மார்ச் 2018 இல் தேனி மாவட்டம் குரங்கணி மலையில் மலையேற்ற பயணத்தின்போது காட்டுத்தீயில் 23 பேர் கருகி இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யானைகள் கண்காணிப்பு பணி: வேட்டை தடுப்பு காவலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?