சென்னை அரும்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை வழக்கம்போல் பள்ளி தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் பிரார்த்தனைக்காக கீழே ஒன்று கூடியிருந்தனர். அப்போது ஆசிரியர்களுக்கு இரண்டாவது மாடியிலிருந்து திடீரென புகை வெளியாகி, கருகும் வாசனை வருவது தெரியவந்தது.
பொதுவாக ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளியின் இரண்டாவது மாடியில் மின்சாரப்பெட்டியின் கீழாக, படிக்கட்டுகளில் புத்தகப்பைகளை வைத்துவிட்டு வந்து பிரார்த்தனைக்குச் செல்வது வழக்கம். அதேபோல, மாணவர்கள் இன்றும் பைகளை வைத்துச் சென்றுள்ளனர்.
தீயில் எரிந்த புத்தகப் பைகள்:அப்போது, திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால், அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களின் புத்தகப்பைகள் புத்தகங்களுடன் தீயில் எரிந்து பாழாகின. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இருப்பினும், பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின், அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மேலும் தீப்பரவாமல் முற்றிலுமாக அணைத்தனர்.
பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் அணைக்கப்பட்ட தீ: இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்பட்டால் அவற்றின் பாதிப்புகளை எப்படி தவிர்க்கலாம் என்று (டெமோ) பயிற்சியில் ஈடுபட்டு காட்டினார்கள். பள்ளியில் தீ விபத்து ஏற்பட இருந்த சூழ்நிலையில் தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்னதாகவே அவற்றை அணைத்த, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களை பாராட்டும் வகையில் தகவல் அறிந்து, மாநகராட்சி தீயணைப்புத்துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். தீயணைப்புத் துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன், தீயினால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் புத்தகப்பைகள் வாங்கிக் கொடுத்து அறிவுரை வழங்கியுள்ளார்.
பெரும் விபத்து தவிர்ப்பு:தீ விபத்தின்போது, ஆசிரியர்கள் சாதுரியமாக தீயை அணைத்த விதத்தை பிரியா ரவிச்சந்திரன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். பள்ளியில் தீ விபத்து நிகழ்ந்தால் தீயை அணைப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பான்கள் (Fire Extinguisher) உள்ளிட்டவைகளை வைத்திருப்பதாகவும், தீ விபத்தின்போது அவசரமாக வெளியேறுவதற்கான கட்டமைப்பை பள்ளியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விபரீத எலியால் தீ விபத்து... கத்தை கத்தையாக எரிந்து போன பணம்...