சென்னை: கொருக்குப்பேட்டை மண்ணப்பன் தெருவில் பழைய இரும்பு குடோன் வைத்துள்ளவர் வேலு. இன்று(ஜூன்.28) அதிகாலை அந்த குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக சம்பவம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஐகோர்ட், சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஐந்து வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தின்போது அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் வீடுகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும் அங்கிருந்த ஏசி மெஷின், தண்ணீர் பைப்கள் போன்றவை முழுவதுமாக சேதமடைந்தன.