ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். வெளிமாநிலங்களிலிருந்தும் வருவது உண்டு. குறிப்பாக மருத்துவமனை கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலே நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அதைப்போல தான் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (ஏப்.27) நடந்த பயங்கர தீ விபத்து அங்குள்ள நோயாளிகளை அச்சத்திற்கு ஆளாக்கி உள்ளது. தீ விபத்து நடந்த குடோனின் முதல் தளத்தில் சிக்கி கொண்ட 33 நோயாளிகளை ஏணி மூலமாக தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தீ விபத்தின் போது மிகுந்த பயத்தில் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டனர். மயிலாப்பூரைச் சேர்ந்த ஆதிலட்சுமி தனது மகன் கார்த்திக்கை சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தீ விபத்து நிகழ்ந்த சமயத்தில் ஆதிலட்சுமி ரத்த பரிசோதனை அறிக்கை வாங்க கீழ் தளத்திற்கு வந்துள்ளார்.
தீ விபத்தை கண்டதும் மயங்கி விழுந்து விட்டார். இதைப்போல மற்ற நோயாளிகளும் மிகுந்த பீதிக்குள்ளாகியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தரைதளத்தில் தீப்பிடித்தவுடன் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் கரும்புகை வந்ததால், கல்லீரல் பிரச்சினை தொடர்பாக அங்கு சிகிச்சை பெற்று வந்த 25 பேர் செய்வதறியாது திகைத்து நின்றதாகவும், உடனே மருத்துவர்களே நோயாளிகளை மீட்டு கொண்டு சென்றதாக நோயாளி கீதா தெரிவித்துள்ளார்.