இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே சீபா(Comprehensive economic partnership agreement) எனும் ஒப்பந்தமும், இந்தியா ஆஸ்திரேலியா இடையே E.C.T.A (economic cooperation and trade agreement) எனும் ஒப்பந்தமும் அண்மையில் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தங்கள் குறித்து தமிழ்நாடு ஏற்றுமதியாளர்களுக்கு விளக்கும் விதமாக கிண்டி ஐடிசி சோழாவில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில குறு சிறு தொழில்துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், "ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 75 பில்லியன் டாலர் முதலீடு இப்போது வந்ததல்ல. நான்கு வருடங்களுக்கு முன்பு நம் பிரதமர் அங்கு சென்றபோதே, எங்கு முதலீடு செய்யவேண்டும் என சொல்லுங்கள். நாங்கள் செய்கிறோம் என அங்குள்ள ராயல் குடும்பத்தினர் அப்போதே சொன்னார்கள். இந்த 75 பில்லியன் மட்டுமல்லாமல், பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான சந்தைகளும் இந்தியாவில் திறக்கப்படுகின்றன. எனவே, ஜாயிண்ட் வென்சர்களை தொடங்குங்கள்.
தோல் பொருட்கள் மட்டுமில்லாமல் துணி மற்றும் சிப் உற்பத்தியிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். மருத்துவ பொருட்கள் உற்பத்தித் துறையில் அவற்றை உருவாக்கத் தேவையான துணை பொருட்களின் உற்பத்தியை நாம் கைவிட்டதன் காரணமாக, இப்போது மருந்துப் பொருட்களை உருவாக்க வேறு நாடுகளுக்காக காத்திருக்கிறோம். எலெக்ட்ரிக் பொருட்கள் முழுமையாக இந்தியாவில் உருவாக்கினாலும் செமி கண்டக்டர் சிப்களுக்காக, வேறு நாடு அனுப்பும் வரை காத்திருக்கும் சூழல் உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்றுமதி மையங்களை ஆறு இடங்களில் உருவாக்குவதாக அமைச்சர் சொன்னார். இதற்குத் தேவையான உள்கட்டமைபு வசதிகளை உருவாக்கத் தேவை என்னவென்று சொல்லுங்கள். மத்திய அரசு கண்டிப்பாக செய்யும். கரோனாவிற்கு பிறகு தொழில்துறையில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன.