தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை குறித்து, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தி குறிப்பு ஒன்றை நேற்று (ஆக. 20) வெளியிட்டார். அதில்,"2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட், தாமிர உருக்காலை ஆலையால் ஏற்பட்டதாகக் கூறப்படும் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிராகப் பொதுமக்கள் போராடினர்.
மே 18இல் சமர்பிக்கப்பட்டது: போராட்டம் நடத்திய 13 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணமான காவல் துறை துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அப்போதைய அதிமுக அரசால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மே 18ஆம் தேதி அன்று சமர்ப்பித்தார். மேலும் விசாரணை ஆணையம் தன்னுடைய இடைக்கால அறிக்கையை 2021 மே 15ஆம் தேதி அன்று இந்த அரசுக்கு அளித்தது.
பல்வேறு ஆணைகள் பிறப்பிப்பு:அவ்வறிக்கையின் பரிந்துரையின்படி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப்பெறவும், போராட்டத்தின்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கவும், பிணையில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதி பரத்ராஜ் என்பவரது தாயாருக்கு 2 லட்சம் ரூபாய் உதவித் தொகையும், திரும்பப்பெற தகுதியுள்ள 38 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் தொடரத் தடையில்லா சான்று வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டது.