சென்னை:44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை அடுத்து மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி தனியார் விடுதியில் நடைபெற உள்ளது. 187 நாடுகளில் இருந்து 2,000 மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாளை இப்போட்டியானது தொடங்க இருக்கும் நிலையில் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
எந்த பக்கம் திரும்பினாலும் சர்வதேச செஸ் போட்டிகள் குறித்த விளம்பர பதாகைகளும், சுவர் ஓவியங்களும், தம்பி குதிரையின் சிலைகள் காணப்படுகிறது. துறை வாரியாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதன்படி, பொதுப்பணி துறையின் மூலமாக ரூபாய் 53 கோடி செலவீட்டில் OMR மற்றும் ECR சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறை சார்பில் செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணிக்கான 4,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். போட்டி நடைபெறும் பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியை மற்றும் சுற்று வட்டாரங்களில் மட்டும் ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மின்சாரத் துறை சார்பில் இன்று முதல் போட்டி நடந்து முடியும் வரை மாமல்லபுரத்தை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 500 KVA மின்மாற்றி (Transformer) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் CCTV கேமரா மூலம் தொடந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.