திருப்பத்தூர் அடுத்த பக்கிரிதக்கா கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு, ஆதிகேசவன் ஆகியோருக்கு இடையே நிலப் பிரச்சினை இருந்துவந்தது.இதுதொடர்பாக சாமிக்கண்ணு தாக்கல்செய்த வழக்கை விசாரித்த, திருப்பத்தூர் உரிமையியல் நீதிமன்றம், 'சம்பந்தப்பட்ட இடத்தில் எந்தவித கட்டடம் கட்டக்கூடாது' என இடைக்கால தடை விதித்தது உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் சாமிக்கண்ணு புகார் கொடுத்தார்.
கே.சி. வீரமணி தூண்டுதல்...
இதற்கிடையில் அமைச்சர் கே.சி. வீரமணி தூண்டுதலின்பேரில், காவல் துறை ஆய்வாளர் பழனிமுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சாமிக்கண்ணுவை மிரட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் அமைச்சர் கே.சி வீரமணி, காவல் துறை ஆய்வாளர் பழனிமுத்து மீது நடவடிக்கை எடுத்து, சிறை தண்டனை விதிக்க வேண்டுமென நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சாமிக்கண்ணு தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் கே.சி. வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது புகார்தாரரான சாமிக்கண்ணு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
காவல் துறை ஆய்வாளர் மிரட்டல்
அதன்படி சாமிக்கண்ணு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அமைச்சர் கே.சி. வீரமணி தூண்டுதலின்பேரில் காவல் துறை ஆய்வாளர் தங்களை மிரட்டி வருவதாகவும், அரசியலமைப்பு பதவியில் இருந்துகொண்டு அமைச்சரே நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதால், அமைச்சர் வீரமணி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கூடாது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.