சென்னை: தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி பணிகள் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
இதனை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, சிறப்பு முகாம்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு முதலாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் செப்டம்பர் 12 அன்று நடைபெற்றதில் 28.91 லட்சம் பயனாளிகளுக்கும், இரண்டாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றதில் 16.43 லட்சம் பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, மூன்றாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் செப்டம்பர் 26 அன்று நடைபெற்றதில் 25.04 லட்சம் பயனாளிகளுக்கும், நான்காவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் அக்டோபர் 3 அன்று நடைபெற்றதில் 17.40 லட்சம் பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 87 லட்சத்து 80 ஆயிரத்து 262 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 323 பயனாளிகளுக்கு அரசு, தனியார் மையங்களின் மூலம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக மூன்று கோடியே 73 லட்சத்து 18 ஆயிரத்து 608 பயனாளிகளுக்கும் (64%), இரண்டாவது தவணையாக ஒரு கோடியே 28 லட்சத்து 11 ஆயிரத்து 715 பயனாளிகளுக்கும் (22%) செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஐந்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் 10ஆம் தேதியன்று நடைபெற தகுந்த முன் ஏற்பாடுகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாநில தடுப்பூசி மருந்து கிடங்கினைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.