ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் ஜனவரி மாதம் 8ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகுகள், வலைகளை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களது உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது.
இதனிடையே 15 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அனைவரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து மீனவர்களுக்கு எமர்ஜென்ஸி சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு, இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.