7.5% இட ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான முதல் நாள் கலந்தாய்வான நேற்று, எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியை 224 மாணவர்களும், 4 மாணவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். 7 மாணவர்கள் அரசு பல்மருத்துவக் கல்லூரியில் இடங்களை தேர்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 3 இடங்கள், 14 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 82 இடங்கள், ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் 5 இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 3 லட்சத்து 85 ஆயிரம் முதல் 4 லட்சம் வரையில் கட்டணம் வசூலிக்கலாம் என கல்விக்கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 12 லட்சத்து 50 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.