சென்னை:சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல். இவரது இரண்டாவது மனைவி ஜெயந்தி (38). இவர்களது மகள்கள் ஐஸ்வர்யா (6), பூஜாஸ்ரீ (4). குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஞானவேல் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இதேபோல் கடந்த 15ஆம் தேதி பொங்கல் அன்று மது அருந்திவிட்டு வந்த ஞானவேல் வழக்கம்போல் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே கைகலப்பு ஏற்பட்டது.
காணாமல்போன கணவன்
இதில் ஆத்திரமடைந்த ஞானவேல் தனது குழந்தைகள் ஐஸ்வர்யா, பூஜாஸ்ரீ ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வேளச்சேரியில் உள்ள தனது உறவினர் அன்பழகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் வரை குழந்தைகளுடன் சென்ற ஞானவேல் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த ஜெயந்தி கணவரை செல்போனில் தொடர்புகொண்டு கேட்டார்.
அப்போது, வேளச்சேரியில் நண்பர் வீட்டில் இருப்பதாகவும், வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஞானவேல் கூறியதுபோல் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த ஜெயந்தி அவரது நண்பரைத் தொடர்புகொண்டு கேட்டபோது ஞானவேல் குழந்தைகளுடன் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஞானவேல் கூறியதுபோல் நேற்றுவரை வீடு திரும்பாததால் ஜெயந்தி காணாமல்போன கணவர், குழந்தைகளைக் கண்டுபிடித்துத் தருமாறு எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஞானவேல், இரண்டு குழந்தைகளைத் தேடிவந்தனர்.