தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் உதயகுமார் பொய்யான அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும்- அமைச்சர் மெய்யநாதன்

குறுகிய காலத்தில் விளையாட்டுத் துறையில் தமிழக அசு படைத்துள்ள சாதனைகளை பொறுத்துக் கொள்ள இயலாமல் பொய்யான அறிக்கைகளை விடும் செயலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைவிட வேண்டும், என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சாதனைகளை பொறுத்துக் கொள்ள இயலாமல் பொய்யான அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும்- அமைச்சர் மெய்யநாதன்
சாதனைகளை பொறுத்துக் கொள்ள இயலாமல் பொய்யான அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும்- அமைச்சர் மெய்யநாதன்

By

Published : Sep 22, 2022, 7:18 AM IST

சென்னை: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி , கபடி, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் என விளையாட்டுத் துறையில் முதலமைச்சர் தலைமையிலான அரசு சாதனைகள் பல புரிந்து சரித்திரம் படைத்து வருகிறது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போடப்பட்டு வழங்கப்படாமல் இருந்த ஊக்கத் தொகையையும் வெற்றி பெற்ற வீரர்களை கண்டறிந்து வழங்கி வரும் நிலையில், காழ்புணர்ச்சியுடன் பொய்யான அறிக்கையை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ளார்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் வெறும் காகிதத்தில் வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வந்த நிலையில் கடந்த 15 மாதங்களில் மட்டும் 1,241 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.36.04 கோடி அளவிற்கு ஊக்கத் தொகையினை முதலமைச்சர் வழங்கி உள்ளார்.

இதில் 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சாதனை படைத்து, முந்தைய அரசால் எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படாமல் வெற்று அறிவிப்போடு கைவிடப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கத் தொகையினை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

2016 முதல் 2019 வரை பரிசு வென்றவர்களுக்கு அப்போது நடப்பில் இருந்த அரசாணையின் படியும் ஜீலை 2019 க்குப் பிறகு பரிசு வென்றவர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் நடப்பில் இருந்த அரசாணையின்படியும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய அரசால் வழங்கப்படாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஊக்கத் தொகை தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தந்த காலகட்டத்தில் நடப்பில் இருந்த அரசாணையின்படி மட்டுமே ஊக்கத் தொகை வழங்க இயலும் என்பதால் அதற்கு ஏற்ப ஊக்கத்தொகை மாறுபடுகிறது. இந்த அடிப்படை உண்மையைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

மேலும் 29.07.2019 அன்று அன்றைய அரசால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி குழுப் போட்டிகளில் தங்கம் வென்றால் 2 நபர் குழு எனில் குழுவிற்கு ரூ.3.00 இலட்சம் என்ற வகையில் நபருக்கு ரூ.1.5 இலட்சம் வழங்கப்பட வேண்டும்; 4 நபர் குழு எனில் குழுவிற்கு ரூ.4.00 இலட்சம் என்ற வகையில் நபருக்கு ரூ.1.00 இலட்சம் வழங்கப்பட வேண்டும்;

10 நபர்கள் கொண்ட குழு எனில் ரூ.6.00 இலட்சம் என்ற வகையில் நபருக்கு ரூ.60.00 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படியே ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் வழங்காத ஊக்கத் தொகையைக் கூட தற்போதைய அரசு வழங்கி வருவதை விளையாட்டு வீரர்கள் பாராட்டுவதை பொறுத்துக்கொள்ள முடியாமலும், முந்தைய ஆட்சிக் காலத்தின் மெத்தனத்தை மறைக்கவும், தற்போதைய ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடும் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வெற்றுகாகித அறிக்கையானது வீரர்கள், இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே மிகுந்த நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டின் மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை உலகமே அறிந்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வென்றவர்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.2.00 கோடி, ரூ.1.00 கோடி, ரூ.50 இலட்சம் என்று இருந்ததை ரூ.3.00, ரூ.2.00 கோடி மற்றும் ரூ.1.00 கோடி என உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கத் தொகை அளித்தும் வருகிறார்.

இந்த அரசு விளையாட்டு போட்டிகளை வெறும் கணக்கிற்காக நடத்தாமல் வீரர்களின் முன்னேற்றத்திற்காக திட்டமிட்டு முறையாக நடத்தி வருகிறது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் விரைவில் நடத்தப்படவுள்ளது. முந்தைய காலங்களில் ஒரே ஒரு பிரிவில் 10 விளையாட்டுக்கள் மட்டும் பெயரளவில் நடத்தப்பட்டு வந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்தவாறு பெண்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரும் பங்குபெறும் வகையில் கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளையும் உள்ளடக்கி சிறப்பாக நடத்தப்பட உள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து விளையாடும் வகையில் விளையாட்டுத் துறையை அனைவருக்குமான ஒரு சிறந்த துறையாக மேம்படுத்திட இந்த அரசு அயராது பாடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் உதகை ஆகிய இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள். சென்னைக்கு அருகாமையில் சர்வதேச விளையாட்டு நகரம் அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் தலைமையிலான அரசு குறுகிய காலத்தில் விளையாட்டுத் துறையில் படைத்துள்ள சாதனைகளை பொறுத்துக் கொள்ள இயலாமல் இதுபோல பொய்யான அறிக்கைகளை விடும் செயலை முன்னாள் அமைச்சர் கைவிட்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் ஏதும் இருந்தால் தெரிவிக்கலாம்.

தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைமையகமாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வரும் முதலமைச்சர் தலைமையில், விளையாட்டுத் துறையில் இந்த அரசு இன்னும் பல சாதனைகள் படைத்து வரலாறு படைக்கும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவிலேயே கைத்தறி நெசவுத்தொழிலில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது - அமைச்சர் காந்தி

ABOUT THE AUTHOR

...view details