சென்னை: கணினி பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரும் மென்பொருள்(மைக்ரோசாஃப்ட்) உரிமம் பெறுவதற்கு சுமார் ஒன்பதாயிரம் ரூபாய் நிறுவனத்திற்குச் செலுத்தி ஆன்லைனில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் வாங்கிப் பயன்படுத்திவருகிறார்கள்.
ஒரு கணினிக்கு ஒரு முறைதான் உரிமம் வாங்கிப் பயன்படுத்த முடியும். ஆனால், இதைத் தவறாகப் பயன்படுத்தி 'பைரட்டேட் வெர்ஷன்' என்ற அடிப்படையில் பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள், அசல் உரிமத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் வாங்காமல் பயன்படுத்திவருகின்றனர். குறைந்த விலைக்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் பைரேட்டட் வெர்ஷன் பயன்படுத்துகின்றனர்.
சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு காவல் துறையால் கைதுசெய்யப்பட்டவர்கள் மோசடியில் போலி கால் சென்டர்கள்
இதுபோன்று பைரேட்டட் வெர்ஷனைப் பயன்படுத்துவர்களைக் குறிவைத்து, குறைந்த விலைக்கு மைக்ரோசாஃப்ட் மென்பொருள் வாங்குபவர்களை மோசடி செய்கின்றனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, பல மோசடி கும்பல்கள் போலி கால்சென்டர் மூலமாக, இ-மெயில் அனுப்பி மோசடி செய்கின்றனர். உலகம் முழுவதும் போலி மைக்ரோசாஃப்ட் மென்பொருள் மூலம் பலரும் மோசடிக்கு உள்ளாகிவருகின்றனர்.
மைக்ரோசாஃப்ட் - சிபிசிஐடி சைபர் செல் பிரிவில் புகார்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் போலி கால் சென்டர்கள் நடத்தி மோசடி செய்யும் கும்பல் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அந்த அடிப்படையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிபிசிஐடி சைபர் செல் பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் இந்த மோசடிக் கும்பலிடம் சிக்கி உள்ளது தெரியவந்துள்ளது.
குறைந்த விலைக்கு மைக்ரோசாஃப்ட் உரிமம்
குறிப்பாக இமெயில், போலி கால் சென்டர் மூலம் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் தேவைப்படும் கணினி பயன்பாட்டாளர்களை அணுகி மோசடி செய்கின்றனர். குறைந்த விலைக்கு மைக்ரோசாஃப்ட் உரிமம் தருவதாகக் கூறி பதிவிறக்கம் செய்யவைக்கின்றனர்.
ஒரு மாதத்திற்கு இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று ஆசைவார்த்தை காட்டி கிரெடிட் கார்டு மூலமாக போலி மைக்ரோசாஃப்ட் மென்பொருளை மோசடிக் கும்பல் கொடுக்கின்றது.
இவ்வாறு மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அம்பத்தூரில் செயல்படும் தனியார் நிறுவன இயக்குநர் ராஜேஷ் ப்லோமான், விவேக், முகமது உமர் ஆகிய மூவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். முக்கிய ஆவணங்களையும் சிபிசிஐடி காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.
பதிவிறக்கம் செய்தால் வைரஸ் டேட்டாக்கள் திருடப்படும்
இந்த மோசடி கும்பல் உலக அளவில் பலரையும் மோசடி செய்துள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கும்பலோடு தொடர்புடைய பலரும், இந்தியா முழுவதும் போலி கால் சென்டர்களை உருவாக்கி மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பயன்பாட்டாளர்கள் மோசடி செய்துவருகின்றனர்.
இதைப் பயன்படுத்தும் கணினி பயன்பாட்டாளர்கள் கணினியில் வைரசை பதிவிறக்கம் செய்யவைத்து டேட்டாக்களைத் திருடுவதாகவும் தெரியவந்துள்ளது.
பலவிதமான வைரஸ்கள் மூலம் டேட்டாக்களைத் திருடுவதோடு மட்டுமல்லாமல் கணினியைச் செயல்படவிடாமல் தடுக்கின்றனர். இதனைச் சரிசெய்ய கால் சென்டரை அணுகுமாறு, பதிவிறக்கம் செய்யப்பட்ட போலி மைக்ரோசாஃப்ட் இணையதளம் மூலமாகவே மெயில் அனுப்புகின்றனர்.
மேலும், இந்தப் போலி மைக்ரோசாஃப்ட் மென்பொருள் மூலமாக கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கித் தகவல்களையும் திருடி மோசடியில் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது.
சிபிசிஐடி சைபர் கிரைம் தீவிர விசாரணை
தொடர்ந்து பிடிபட்ட மூவரிடமும் சிபிசிஐடி சைபர் கிரைம் காவல் துறை தீவிர விசாரணை நடத்திவருகின்றது. தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் எவ்வளவு பிறரை ஏமாற்றி உள்ளார்கள் எனவும், இவர்களோடு தொடர்புடைய மற்ற கும்பல் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: தங்கமணி கிரிப்டோகரன்சியில் முதலீடு?- விசாரணை தீவிரம்