சென்னை அண்ணா சாலையில் செயல்படும் பென்ஸ் கிளப்பின் ஒரு பகுதியில் போலி அழைப்புதவி மையம் செயல்பட்டுவந்துள்ளது. இந்தப் போலி அழைப்புதவி மையத்தைப் பயன்படுத்தி லோன் வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு 400-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைத் தலைவர் செல்வா என்ற செல்வகுமார், குமரன், மிதூன் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்தனர். பென்ஸ் சரவணன் ஏற்கனவே 2018ஆம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் 39 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.