தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருத்துவமனைகளில் கரோனா படுக்கை வசதி அதிகரிக்க தீவிர நடவடிக்கை!

சென்னை: மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து மருத்துவமனைகளையும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 17,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

coronavirus
coronavirus

By

Published : May 31, 2020, 6:18 PM IST

Updated : May 31, 2020, 7:57 PM IST

சென்னையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில், ஏற்கனவே நோய்கள் இருப்பவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

சிறுநீரகக் கோளாறு, இதய கோளாறு, மாற்று அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட 11 நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனியாக மருத்துவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உயர்மட்டக் குழுவின் சிகிச்சை பலனளிக்காமல் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் இறப்பது அதிகரித்து வருகிறது.

மேலும், மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகரிக்கவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகள் முழுவதையும் கரோனா சிகிச்சை அளிப்பதற்காக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் 17,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1600 முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு நாளை சென்னையில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால் மருத்துவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

மருத்துவமனை

இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் செயல்பட்டுவரும் புறநகர் மருத்துவமனை, கே.கே. நகரில் செயல்பட்டு வரும் புறநகர் மருத்துவமனை ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள படுக்கை வசதிகளை பயன்படுத்தி கரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் அதே நேரத்தில் தேவையான அளவு மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் நோய்த் தொற்று மேலும் வேகமாக பரவினால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் பின்னடைவுகள் ஏற்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Last Updated : May 31, 2020, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details