சென்னை: ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர் அம்பத்தூர், ஐசிஎப் காலனியில் ஜக்கம்மா என்ற பிரியாணி கடை நடத்திவருகிறார். இவரது கடையில் ஐசிஎப் காலனியைச் சேர்ந்த நான்கு பேர் மாமூல் கேட்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் (அக்.05) மீண்டும் வந்து கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளனர்.
அப்போது கடையின் உரிமையாளர் பயந்து கள்ளாவில் இருந்து 600 ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளார். இந்தக் காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் விஜய் ஆனந்த் உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
குற்றவாளிகள் நான்கு பேர் கைது
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கடையில் ரகளை செய்தவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஐசிஎப் காலனியைச் சேர்ந்த தினேஷ், அவரது கூட்டாளிகள் மூவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நான்கு பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும், ஐசிஎப் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் பண தேவைக்காக தொடர் வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இது குறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:80 காவல் நிலையங்களில் வழக்கு: கவ் பார் கொள்ளையன் கைது