சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என 154 பேரிடம் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது.
அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை
மருத்துவக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 90 சதவீதம் விசாரணையை ஆணையம் முடித்துள்ளதால் அப்பல்லோ கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பல்லோ உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், 11ஆவது முறையாக கொடுக்கப்பட்ட ஆறு மாதம் கால அவகாசம் ஜனவரி 24ஆம் தேதி முடிவடையவுள்ளது. எனவே கால நீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியதை தொடர்ந்து 5 மாதங்கள் (25-01-2022 முதல் 24-06-2022) கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் நீட்டிப்பு
கடந்த முறை கால நீட்டிப்பு கடிதத்தில் உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தாமதம் ஆவதை அரசு வழக்கறிஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பதாக குற்றஞ்சாட்டி, ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு சுட்டிக்காட்டி இருந்தது.
ஆனால் இன்னும் ஆணையத்தின் விசாரணைக்கான இடைக்கால தடை மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்த சரியான தகவல் கிடைக்கவில்லை.
ஆணையத்தில் இறுதியாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி, தம்பி துரையிடம் விசாரணை நேரடியாக நடைபெற்றது. இதன் பின்பு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த 41 மாதங்களாக விசாரணை நடைபெறாமலே தமிழ்நாடு அரசு கால நீட்டிப்பு செய்து வருகிறது.
இதையும் படிங்க: பிரதமருக்கு எதிரான போராட்டம்- 12 பேர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!