சென்னை: எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடிய நரிக்குறவ மக்களின் 4 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நரிகுறவர்கள் சமூகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் ஸ்ரீதர், "முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடித்த "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க" என்ற பாடலில் நடித்த நரிகுறவர்கள் சமூகத்தை சேர்ந்த பாயம்மா, லட்சுமி மற்றும் ஆப்பிள் ஆகியோருக்கு இலவசமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் பகுதியில் 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.
பின்னர் இவர்களால் இந்த இடத்தை பராமரிக்க முடியாத காரணத்தினால் விற்பனை செய்து, அந்த பணத்தை தனது சொந்தங்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்து, அதே இனத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை அனுகியுள்ளனர்.
ஒரு ஏக்கர் 80 லட்சம் என மொத்தமாக 5 ஏக்கர் நிலத்தை நிதிஸ் ஜெயின் என்பவர் வாங்க தயாராக இருப்பதாகவும், முதலில் பொது அதிகாரம் மாற்ற வேண்டும் என இவர்களிடம் கார்த்திகேயன் அசல் பத்திரங்களை வாங்கி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார்.