இந்த, 2021 ஜூன் மாதத்தில் 120 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்ததாகவும், ஆனால், மே மாதத்தின் மொத்த கையிருப்பான 79 மில்லியன் டோஸ்களிலிருந்து சுமார் 58 மில்லியன் டோஸ்கள் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பதாகவும் ஒரு சில ஊடகங்களில் வெளியாகியுள்ளத் தகவல்கள் பொய்யானவை, அடிப்படை ஆதாரமற்றவை.
கையிருப்பில் இருந்த டோஸ்கள் 79.45 மில்லியன்
ஜூன் 1 அன்று காலை 7 மணிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மொத்தம் 61.06 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் செலுத்தியுள்ளன.
16.22 மில்லியன் டோஸ்கள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. மே 1 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கையிருப்பில் இருந்த மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 79.45 மில்லியன் ஆகும்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் ஒரு சில ஊடக செய்திகள் இந்தியாவின் தடுப்பூசி கொள்கையை விமர்சித்துள்ளன. இந்த விஷயம் தொடர்பான முழு தகவல்களையும் அறியாமல் தகுதி வாய்ந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக இந்த செய்திகள் கேள்வி எழுப்பியுள்ளன.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை
தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களுக்கு உரிய விளக்கம் தடுப்பூசியை செலுத்துவதில் குறிப்பிட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குதல், தடுப்பூசியின் கொள்முதல், தேர்வு, அதன் விநியோகம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் வழிநடத்துவதற்காக, 2020 ஆகஸ்ட் மாதம் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
கைவசம் உள்ள அறிவியல் பூர்வமான ஆதாரங்கள், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வழிமுறைகள், சர்வதேச உதாரணங்கள், பிற நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் முதலியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதில் குறிப்பிட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
• பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாப்பது.
• கோவிட்-19 தொற்றால் நேரிடும் உயிரிழப்புகளை தடுப்பது, தொற்றினால் உயிரிழக்கும் அபாயம் உள்ள பிரிவினர் மற்றும் தனிநபர்களைப் பாதுகாப்பது.
கோவிட்-19 தடுப்பூசி
அதன்படி முன்னுரிமை அளிக்கப்பட்ட பிரிவினர் வரிசையில் முதலில் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், அதைத்தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், அதன் பிறகு கண்டறியப்பட்ட 20 இணை நோய்கள் உள்ள 45 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டன. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இரண்டாவது அலையில் முதல் டோஸ் தடுப்பூசி
இந்த அணுகுமுறையால் கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையிலும் மருத்துவ சேவைகள், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் பாதுகாப்பிற்காக பதிவு செய்யப்பட்ட மருத்துவ ஊழியர்களில் 81 விழுக்காட்டிற்கு அதிகமானோருக்கும், 84 விழுக்காட்டிற்கு மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
45 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 37 விழுக்காடு பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், இதே பிரிவில் 32 விழுக்காடு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசியை இலவசமாக வழங்கும் ஒன்றிய அரசு
மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மே 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ‘தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கோவிட்-19 தடுப்பூசி உத்தி’, கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது கட்டத்தை வழி நடத்திச் செல்கிறது.
இந்த உத்தியின் கீழ் மத்திய மருந்துகள் ஆய்வகம் ஒப்புதல் அளித்த மொத்த தடுப்பூசி டோஸ்களில் இந்திய அரசு 50 விழுக்காட்டை ஒவ்வொரு மாதமும் கொள்முதல் செய்யும். முன்பை போலவே தற்போதும் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்கும்.
எஞ்சியுள்ள 50% டோஸ்களை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்யலாம்.