தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செல்லப் பிராணிகள் பட்டியலிலிருந்து பறவைகளை நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் - செல்லப் பிராணிகள்

சென்னை: செல்லப் பிராணிகளுக்கான பட்டியலில் இருந்து பறவைகளை நீக்குவது என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : Sep 15, 2020, 11:18 PM IST

மிருக வதை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகளில் உள்ள செல்லப் பிராணிகள் என்ற விளக்கத்தை நீக்க கோரி வினோத் ஓ.ஜெயின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திறந்த வான்வெளியில் பறப்பதற்கான அடிப்படை உரிமையை பெற்றிருக்கும் பறவைகளை, செல்ல பிராணி என கூண்டுக்குள் அடைத்து வைக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின்படி பறவைகளும் அடிப்படை உரிமைகளை பெற்றிருப்பதாகக் கூறுவதை முதன்முதலாக கேள்விப்படுவதாக கூறியதுடன், பறவைகளை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? செல்லப் பிராணிகளை கூண்டில் வைத்து வளர்க்க மனிதர்களுக்கு உரிமை இல்லையா? எனவும் மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர்.

பின்னர், மிருகவதை தடுப்புச் சட்டத்திலிருந்து செல்லப் பிராணிகளுக்கான விளக்கத்தை நீக்கினால், மீன் காட்சியகத்தில் மீன்களை வைத்திருப்பது முதல் மிருககாட்சி சாலையில் விலங்குகளை வைத்திருப்பது வரை அனைத்துமே சட்டவிரோத காவலாக மாறிவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, பறவைகளுக்கு மட்டுமே பறக்கமுடியும் என்ற நிலையுடன் இறைவன் படைத்து உள்ளபோது, பறக்க முடியாத மனிதன் அவற்றின் உரிமைகளை மறுக்க முடியாது என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

பின்னர், இந்த வழக்கின் உத்தரவை நீதிபதிகள், நாளைக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details