தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Exclusive: புதிய கோணத்தில் கீழடியைக் காண சென்னையில் கண்காட்சி - சென்னையில் கீழடி கண்காட்சி

மக்களின் ஆர்வம் மற்றும் பல சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகியவற்றின் காரணமாக நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறையே நடத்தி முடித்தது. தற்போதுவரை ஏழு கட்ட அகழாய்வு முடிந்து, எட்டாவது கட்ட அகழாய்வு தொடங்க உள்ளது.

keezhadi excavation  keezhadi civilization  keezhadi exhibition in Chennai  keezhadi artifacts and photos exhibition  கீழடி அகழாய்வு கண்காட்சி  சென்னையில் கீழடி கண்காட்சி  கீழடி அகழாய்வு செய்திகள்
புதிய கோணத்தில் கீழடியை காண சென்னையில் கண்காட்சி

By

Published : Feb 3, 2022, 8:42 AM IST

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக மத்திய, மாநில தொல்லியல் துறை அகழாய்வு செய்துவருகிறது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடியில் செய்யப்பட்ட ஆய்வில் பழங்காலத்து பெரிய சுவர், மணிகள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் எனப் பல பொருள்கள் கிடைத்தன.

இந்த அகழாய்வில் கிடைத்த பொருள்கள் மூலம் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆய்வுப்பணிகள் அடுத்தகட்டத்துக்குச் சென்றன. கீழடியில் தொடர்ந்து அதன் அருகில் இருக்கும் இடங்களிலும் இந்த ஆய்வு தொடங்கப்பட்ட்டது. இந்த ஆய்வை நடத்திவந்த இந்தியத் தொல்லியல் துறை, மூன்றாம் கட்ட அகழாய்வுகளுக்குப் பிறகு வேறு எந்த ஆய்வும் நடத்தவில்லை.

மக்களிடையே ஆர்வம்

மக்களின் ஆர்வம், பல சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகியவற்றின் காரணமாக நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறையே நடத்தி முடித்தது. தற்போது வரை ஏழு கட்ட அகழாய்வு முடிந்து, எட்டாவது கட்ட அகழாய்வு தொடங்க உள்ளது. தொல்லியல் துறையின் இந்த ஆய்வுப் பணிகள் மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றன.

இதைத் தொடந்து கிருஷ்ணகிரி, மதுரை என பல மாவட்டங்களில் இந்த அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. பெரிய பானை, உறை கிணறு, நாணயம், நீண்ட வாள் எனப் பல பழங்காலத்து அதிசய பொருள்கள் கிடைத்தன. கீழடி மற்ற இடங்களில் கிடைக்கும் பொருள்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு அதனைப் பாதுகாப்பாகத் தோண்டியெடுக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த அரும்பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் இந்தத் தொழிலாளர்களைப் பெரும்பாலும் நாம் கொண்டாட மறந்துவிடுகிறோம். இந்த அகழாய்வில் ஈடுபடும் தொழிலாளர்களைக் கொண்டாடும்விதமாகவும், அவர்கள் அன்றாடம் செய்யும் பணியை குறித்து மக்களுக்கு எடுத்துச் செல்ல சென்னை போட்டோ பயன்னல்லே (Chennai photo Biennale) என்ற அறக்கட்டளை அரசு மற்றும் பல தனியார் நிறுவனங்கள் உடன் இணைந்து ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

புதிய கோணத்தில் கீழடியை காண சென்னையில் கண்காட்சி

சென்னையில் கண்காட்சிக்கு ஏற்பாடு

சென்னை போட்டோ பயன்னல்லே அமைப்பானது 2015ஆம் ஆண்டு முதல் நகர்புறக் கற்பனையாக்கங்கள், சாமானியர்கள், ஓட்டங்கள், தொல்லியல், சுரங்கம் பற்றியும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பற்றியும், காஷ்மீரில் மக்கள் மீது நடைபெறும் தாக்குதல் பற்றியும் புகைப்படமாகவும், ஆவணப்படமாகவும் பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லி வருகின்றனர்.

அன்மைக் காலமாக கீழடி சமூக வலைதளத்தில் அதிகமாகப் பேசும் பொருளாக மாறியதால் இது பற்றி பொதுமக்கள் அதிகம் அறியாத பக்கங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என இந்த அமைப்பினர் முடிவுசெய்தனர். அதன் அடிப்படையில், அங்கு கிடைக்கும் பழங்காலத்து பொருள்களுடன் அதனைப் பாதுகாப்பாக வெளியில் எடுக்கும் தொழிலாளர்கள் பற்றியும் புகைப்படம், ஆவணப்படம் எடுத்து பொதுமக்கள் பார்வைக்கு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அகழாய்வின் ஐந்து, ஆறாம் கட்டத்தின்போது கீழடி குறித்து பொதுமக்களிடம் ஆர்வம் அதிகம் காணப்பட்டதால், இதை வேறு கோணத்தில் காட்ட வேண்டும் என்ற நோக்கில் கீழடி குறித்து புகைப்படம், ஆவணப்படம் எடுக்க முடிவுசெய்தோம் என்கிறார் கண்காட்சியின் காப்பாளர் பூமா பத்மநாபன்.

இது தொடர்பாக அவர் நம்மிடம் பேசியபோது, "2019ஆம் ஆண்டு அகழாய்வு ஐந்து, ஆறாம் கட்டத்தின்போது இதைப்பற்றி சமூக வலைதளம், செய்திகளில் அதிகமாகப் பேசப்பட்டது. தமிழ் பாரம்பரியம் என்ன சொல்கிறது, இங்கு என்ன மாதிரியான பொருள்கள் கிடைக்கின்றன, தொழிலாளர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் முதலியவை குறித்து புகைப்படம், ஆவணப்படம் எடுக்க முடிவுசெய்தோம். இரண்டு நபர்கள் வெவ்வேறு திட்டங்கள் கீழ் கீழடி பற்றி புகைப்படம், ஆவணப்படம் எடுத்தனர்.

மதுரையைச் சேர்ந்த சரன் ராஜ் என்பவர் அங்கு இருக்கும் தொழிலாளர்கள் என்ன மாதிரியான பணிகள் மேற்கொள்கின்றனர், அவர்கள் என்ன மாதிரியான விஷயங்களை யோசிக்கிறார்கள் முதலியவை குறித்து புகைப்படம், ஆவணப்படம் எடுத்தார். மற்றொருவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியாஸ் இவர் பொதுமக்கள் இந்த மாதிரியான செய்திகளை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள், என்ன மாதிரியான கோணத்தில் பார்க்கிறார்கள் முதலியவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.

இங்குப் புகைப்படம், சூரிய ஒளியைப் பயன்படுத்தி துணிகளில் தொழிலாளர்கள் புகைப்படம், ஆவணப்படம் முதலியவற்றைச் செய்தோம். இது செய்வதற்கு அரசு மிகவும் உதவியாக இருந்தது. எடுக்கப்படும் புகைப்படத்தை அன்றிரவே முக்கியமான புகைப்படங்களை என்னவென்று தேர்வு செய்து தனியாக எடுத்துவைத்து விடுகிறோம். அதற்குப் பிறகு இதனை மக்களுக்கு கொண்டுசெல்வதற்காக இடங்களைத் தேர்வுசெய்து அங்கு பொதுமக்கள் பார்வைக்கு தேர்வுசெய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்வைக்கு வைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

புகைப்பட கலைஞரின் அவா

இந்த கீழடி அகழாய்வுப் பணியில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் பற்றி எந்த ஒரு ஆவணமும் பதியப்படுவது இல்லை. எனவேதான் இவர்களை ஆவணப்படுத்த முடிவு செய்தேன் என்கிறார் புகைப்பட கலைஞர் சரண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "ஜூன் மாதம் 2020இல் கீழடி பற்றிய புகைப்படம், ஆவணப்படத்தை எடுக்க தொடங்கி டிசம்பர் 2021 தேதிதான் நாங்கள் முடித்தோம். முதலில் சென்று அங்கு கிடைக்கும் பழங்காலத்து பொருள்களை எடுக்கத் தொடங்கினோம்.

அங்கு சென்று அங்கு பணிபுரியும் தொழிலாளர்களைப் பற்றி தேடியபோது எங்கேயுமே அவர்களைப் பற்றி குறிப்பிடவில்லை, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் மேலாகவும் இந்த அகழ்வாராய்ச்சியில் சில தொழிலாளர்கள் பணி செய்துவருகின்றனர்.

எனவே அதைப் பற்றி புகைப்படம், ஆவணப்படம் எடுக்க முடிவுசெய்து எடுக்க தொடங்கினோம் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவர்களுடன் பழகி பேசிய பிறகுதான் அனைத்துப் புகைப்படங்களும் ஆவணப்படங்களும் எடுக்கப்பட்டன. தற்போது இது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பார்வையிட்டுவருகின்றனர் பார்வையிட்ட பிறகு இதுபோன்ற கோணத்தில் நாங்கள் பார்த்ததில்லை என மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்" எனத் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி இந்த மாதம் 6ஆம் தேதிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இந்தக் கண்காட்சியைப் பார்வையிடும் மக்களுக்கு, இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பது எந்த ஐயமும் இல்லை.

இதையும் படிங்க: பண்டைத் தமிழர்களின் வீர வரலாறு - சென்னையில் ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வு கண்காட்சி!

ABOUT THE AUTHOR

...view details