தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெரிய கோவில்களின் நிதியை பயன்படுத்த மாட்டோம் - தமிழ்நாடு அரசு உறுதி - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கிராம கோவில்களின் சீரமைப்பு பணிகளுக்காக, பெரிய கோவில்களின் உபரி நிதி 10 கோடி ரூபாயை தற்போது பயன்படுத்த மாட்டோம் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.

highcourt
highcourt

By

Published : Jul 27, 2020, 6:15 PM IST

கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் உள்ள 47 பெரிய கோவில்களில் உள்ள உபரி நிதியில் இருந்து, 10 கோடி ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒதுக்கி கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் கிராம கோவில்களின் சீரமைப்புப் பணிகளுக்காக 20 பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை ஒதுக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி திருவரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ”இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் கிராம கோவில்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என கடந்த மார்ச் மாதம்சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் உள்பட 20 பெரிய கோவில்களில் இருந்து 25 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பயன்படுத்த அனுமதியளித்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுபோல கோவில் நிதி வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் ” எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் நிதியை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைக்கு இந்த நிதியை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details