சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு பொதுப்பணி துறையின் முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் அ. வீரப்பன் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யோக பேட்டியில், "கடந்த மாதங்களில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக இன்றும் ஆறுகளில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களுடைய தரவுப்படி 300 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இந்த வெள்ள மிகை நீரை தேக்கி வைப்பதற்கு முந்தைய அரசும் சரி, தற்போது ஆளும் அரசும் சரி எந்த ஒரு திட்டத்தையும் தீட்டவில்லை.
தமிழ்நாட்டின் 300 டி.எம்.சியோ, 100 டி.எம்.சியோ அல்லது 50 டி.எம்.சியோ தேக்கி வைப்பதற்கான கட்டமைப்புகள் இல்லை. இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். காவேரியிலிருந்து வரும் நீரை நேரடியாக தேக்கி வைக்க முடியாது. எனினும், மேட்டூரிலிருந்து பெரும்பாலான நீர் தேக்ககங்கள் மற்றும் வழித்தடங்களை நாம் காணலாம்.
இவற்றின் மூலம் 40 டி.எம்.சி மழைநீரை தேக்கி வைக்கலாம். சென்னையை பொறுத்தவரை ஐந்து மெட்ரோ ஏரிகள் உள்ளன. இவைகளில் அடுத்த ஒரு வருடத்திற்கான தண்ணீர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வரும் வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில் அதிக மழை பெய்தால் அந்த மழை நீரும் கடலுக்குத்தான் செல்லும்.
தூர்வாரும் பணிகளை பற்றி கூறும்போது, எங்களுக்கு தெரிந்தவரை அரசாங்கம் தூர்வாரும் பணிகளுக்கன ஒரு பெரிய திட்டத்தை கொண்டுவரவில்லை. ஆனால், கொண்டு வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. கடந்த ஆட்சியில் குடிமராமத்து என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் பொதுப்பணி துறை பொறியாளர் வீரப்பன் நதிகள் இணைப்பு திட்டங்களை பொறுத்தவரை, கடந்த அதிமுக ஆட்சியில் கோதாவரியிலிருந்து காவிரிக்கும், காவிரியிலிருந்து குண்டாறுக்கும் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அசருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதற்கு பதிலாக தமிழ்நாட்டில் பெய்யும் மழை நீரேப் போதும் என்பது எங்களின் கருத்து. வெளி மாநில தண்ணீரை நம்பி இருக்காமல் நமது மாநிலத்தில் பெய்த மழை நீரை சேமித்து வைத்தாலே போதும். தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்ற தவறான கண்ணோட்டம் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பெய்த மழையின் அளவை விட தமிழ்நாட்டில் மழை பெய்யும் அளவு அதிகம். ஆனால் போதுமான தண்ணீர் மேலாண்மை திட்டம் இல்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் மாநகரப் பேருந்துகளின் நிழற்குடைகள் அகற்றம் - பயணிகள் அவதி..!