தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அறிவுசார் சமூகத்தின் அடையாளமான பொதுநூலகத்துறையை முடக்குவதா? - தங்கம் தென்னரசு கேள்வி - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்புகளைக் கூட வாங்காமல் அறிவுசார் சமூகத்தின் அடையாளமான பொது நூலகத்துறையை முடக்குவதா? நூலகத்திற்கு நூல்கள் வாங்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் குறித்து வெள்ளை அறிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டும் என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Thangam thennarasu
Thangam thennarasu

By

Published : Dec 8, 2020, 4:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் நூலகத்திற்கு நூல்கள் வாங்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் குறித்து வெள்ளை அறிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டும் என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் முக்கிய பிரிவுகளில் பொது நூலகத் துறை குறிப்பிடத்தகுந்த ஒன்று. பொது நூலகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது 1972ஆம் ஆண்டில் பொது நூலகத்துறை இயக்குநரகம் உருவாக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள கன்னிமாரா நூலகம் இன்று 125 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

கலைஞர் கருணாநிதியின் சாதனைத் திட்டமாகவும், ஆசியாவின் பெரும் நூலகங்களில் ஒன்றாகவும் உலகப்புகழ் பெற்று மிளிரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட 4,500க்கும் அதிகமான நூலகங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.

இந்நூலகங்களில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கென ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், பல கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசால் வாங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வாங்கப்படும் புத்தகங்கள், அவற்றின் எண்ணிக்கை, அவற்றை வெளியிட்ட பதிப்பகங்கள், செலவிடப்பட்ட தொகை குறித்து எந்த வெளிப்படைத் தன்மையும் தற்போது கடைப்பிடிக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தினர் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

அண்மைக்காலமாக தமிழில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தகுந்த படைப்புகள் கூட பொது நூலகத்துறையால் வாங்கப்படவில்லை என்ற குரல் எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது. பிரபலமான தமிழ் நாளேடு ஒன்றில் இன்று (டிச.8)“கன்னிமாரா நூலகம்: சென்னையின் அறிவுச் சின்னம்” எனும் தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையில் “தற்போதைய கணக்குப்படி கன்னிமாரா நூலகத்தில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், சமீப ஆண்டுகளில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்த முக்கிய புத்தகங்கள்கூட வாங்கப்பட்டதாகக் காட்சிக்குப்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது. இந்தியாவில் வெளியிடப்படும் எந்தப் புத்தகமாயினும் அதன் ஒரு பிரதி அளிக்கப்பட வேண்டும் என்ற தகுதி பெற்ற நான்கு முக்கிய தேசிய வைப்பு நூலகங்களுள் (National Depository Centre) ஒன்றாக விளங்கும் கன்னிமாரா நூலகத்தின் இன்றைய நிலை இதுதான் என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றென்பதைத் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் பொது நூலகத்துறையின் மூலம் வாங்கப்பட்ட நூல்களில், சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்கள் கூட இடம் பெறவில்லை என்பதும், குறிப்பிட்ட சில இடைத்தரகர்களுடன் மட்டும் கை கோர்த்து புத்தகங்கள் வாங்கப்படுவதாகவும், ஒரே புத்தகம் பல பெயர்களில் அச்சிடப்பட்டு வாங்கப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து நூலக நடவடிக்கைகளின் மீது அக்கறை கொண்ட சில சமூக ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், குறிப்பிட்ட ஓர் ஆண்டில் வாங்கப்பட்ட புத்தங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய வினாக்களுக்குப் பொது நூலகத்துறை உரிய தகவல் அளிக்க முன்வராமல் இத்தகைய தகவல் கோர வாய்ப்பில்லை என்ற ரீதியில் பூசி மெழுகிப் பதிலளித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

அறிவுசார் சமூகத்தில் நூலகங்களின் செயல்பாடு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்தும், தமிழ்ப்பதிப்புச் சூழல் சந்தித்துவரும் சவால்களை எண்ணிப் பார்த்தும், அவற்றின் மேம்பாட்டிற்காகவும், அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற பதிப்பாளர்கள், தொழிலாளர்கள் நலன் காக்கவும் கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட ‘தமிழ் நாடு புத்தகப் பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம்’ கடந்த பத்தாண்டுக் காலமாக எந்த செயல்பாடுகளும் இன்றி முடங்கிப் போயிருக்கின்றது. நல வாரியத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய நலத்திட்டங்களுக்காகத் தொடர்ந்து புத்தக வெளியீட்டாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 2.5 விழுக்காடு தொகை மூலம் கடந்த பத்தாண்டுகளில் ஒருவருக்கேனும் உதவி செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு இந்த அரசிடம் எந்த பதிலும் இல்லை. பொது நூலகத்துறையே கடந்த பத்தாண்டுகளாக முழு நேர இயக்குநர் நியமனம் இன்றி, கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பாரின்றித் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

இந்த அவல நிலை மாற இன்னும் அதிக நாட்கள் இல்லை; திமுக ஆட்சிக்கு வரும்போது பொது நூலகத்துறை, புதுப் பொலிவு காண்பது உறுதி. நூலகத்துறை தன் மீது படர்ந்திருக்கும் களங்கத்தைக் கழுவிக்கொள்ளும் பொருட்டாவது, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து, நூலகத்துறை சார்பில் சமீப காலமாக வாங்கப்பட்ட அனைத்து நூல்கள், அவற்றின் எண்ணிக்கை, பதிப்பாளர்கள், தொகை குறித்த முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு, தரமான படைப்புகளை பொது நூலகங்களுக்கான பயன்பாட்டிற்காக வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெரியாரிய சிந்தனையாளர் வே. ஆனைமுத்து நலம்பெற வைகோ ஆறுதல்

ABOUT THE AUTHOR

...view details