பொதுமக்கள் நலனுக்காக கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை.3) தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் "நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தரமானதாகவும், தங்குதடையின்றியும் கிடைக்க வேண்டும். குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் உள்ளிட்டவர்களில் தகுதியானவர்களுக்கு கடன் வழங்கிட வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.