தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோடு பெரும்பள்ள ஓடையில் கட்டுமான பணிக்குத் தடை நீட்டிப்பு - mhc orders

சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ஈரோடு பெரும்பள்ள ஓடையில் கட்டுமானங்கள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 20, 2021, 6:40 PM IST

சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ், 112 கோடி ரூபாய் செலவில் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ள ஓடையில் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்துக்குத் தடை கோரி இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச்சங்கம் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டுமான பணிகள் மேற்கொள்ள இடைக்காலத் தடைவிதித்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அழகின் பெயரில் சிதைக்கப்படும் ஓடை

அப்போது, ஓடையில் பூங்கா உள்ளிட்ட கட்டுமானங்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் மேற்கொள்ளப்படுவதாகவும், அழகுப்படுத்தும் பெயரில் ஓடை சிதைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்கொள்ளும் இத்திட்டத்தை, எட்டு பாகங்களாகப் பிரித்து டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புக்கு மேல் பணிகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர், திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக் கோரினார்.

தடை நீட்டிப்பு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஈரோடு பெரும்பள்ள ஓடையை அழகுப்படுத்தும் திட்டத்துக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்படுவதால், இந்த விவகாரம் தொடர்பாக தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தை அணுக மனுதாரர் அமைப்புக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

பெரும்பள்ள ஓடையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை ஆறு வாரங்களுக்கு நீட்டித்த நீதிபதிகள், இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக ஆய்வுசெய்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க:ஈரோடு பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்புவதை எதிர்த்து வழக்கு: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details