சென்னை: அதிமுக பொதுக் குழு நாளன்று (ஜூலை 11) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கலவரத்தை தூண்டுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கோதண்டராஜன் முன்பு இன்று (ஜூலை 19) விசாரணைக்கு வந்தது.