சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை கோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார். அதன்படி அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரம் தனியார் மண்டபத்தில் காலை 9.15 மணியளவில் தொடங்கி, பகல் 1 மணி வரை நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, எம்ஜிஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலைப் போல, மாபெரும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்பதை போல எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என்றும், "மாறாதய்யா மாறாது மனமும் குணமும்" போல சிலர் இருக்கிறார்கள். அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நடத்த எடப்பாடியார் இருக்கிறார் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய தமிழ்மகன் உசேன், "புரட்சித் தலைவர்", "புரட்சித் தலைவி" என்று மறைந்த முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவை அழைப்பது போல், எடப்பாடி பழனிசாமியை "எழுச்சித் தலைவர்" என்று அழைக்க வேண்டும் என தெரிவித்தார்.