சென்னை:அதிமுகவில் ஒற்றை தலைமை யுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுக தலமை அலுவலகத்திற்கு செல்கிறார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது. அன்றிலிருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.
அதே நாளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினரிடையே நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பொருட்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. பின்னர் ஈபிஎஸ் தரப்பிடம் அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்குமாறு வருவாய் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல ஆவணங்களை திருடிச் சென்றுள்ளதாக புகார் அளித்தார். இந்த வழக்கானது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று(செப்.7) அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.