முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பங்கள், மாற்றங்கள் நடந்து கொண்டே இருந்தது. ஒருவழியாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்புக்கு பிறகு மீண்டும் அதிமுக ஒன்றுபட்டது. இவர்களது தலைமையில் அதிமுக செயல்பட்டாலும் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் தங்களை மதிப்பதில்லை எனக் கடைநிலை நிர்வாகிகள் குமுறுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் 'நாங்கள் ஏன் இவர்களுக்கு கீழ் வேலை செய்ய வேண்டும்? உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு மரியாதை இல்லை' என மாவட்ட நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான புகார்களை கடைநிலை நிர்வாகிகள் அதிமுக தலைமைக்கு அனுப்பியுள்ளனர். இந்த உள்கட்சிப் பூசலை விரைவில் தீர்க்காவிட்டால் வரக்கூடிய தேர்தல் அதிமுகவுக்கு பாதகமாகிவிடும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
எனவே அதிமுக கீழ்மட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசி, கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி மார்ச் மாதத்திலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்கு ஒன்பது மாவட்டங்களுக்குச் செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, அங்குள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசவுள்ளார். இதேபோன்று மற்ற மாவட்டங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்க, முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க;கோயில் திருவிழாவில் தண்ணீர் பந்தல் அமைத்த இஸ்லாமிய இளைஞர்கள்! - குவியும் பாராட்டுகள்